முறைகேடு புகார்: "முன்னாள் பதிவாளர் மீது நடவடிக்கை எடுங்க" - நீதிமன்றம் உத்தரவு...
நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் அவரை உடனடியாக பணியிட நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உயர்க்கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும் பரிந்துரையை ஏற்காமல், பதிவாளர் தங்கவேலுவை பணியிட நீக்கம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார் துணைவேந்தர் ஜெகநாதன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையில் உயர்க்கல்வித்துறையின் பரிந்துரையை எதிர்த்து பதிவாளர் தங்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தப் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பல்கலைக்கழகம் என்பது தனி சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு , மனுதாரர் 34 வருட அனுபவம் கொண்டவர் என்றும், விரைவில் ஓய்வு பெற உள்ளவரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்தது அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆகையால் பணியிடநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதி உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தற்போதைய பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், இது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த பரிந்துரைகள் சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். தங்கவேலை பணியிட நீக்கம் செய்யும் பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஏன் மீண்டும் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்ப, பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளராக இருந்த தங்கவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக குற்ற வழக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து, முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை எனவும், அவருக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் மாதம் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
What's Your Reaction?