ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செல்வபெருந்தகைக்கு தொடர்பா? வெகுண்டெழுந்த இளைஞர் காங்கிரஸார்!
ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள புகாருக்கு இளைஞர் காங்கிரஸார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு இருக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகையை தொடர்புபடுத்தி பேசிவரும் பிஎஸ்பி கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அனிஷ் ராஜ்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனுவை அளித்து உள்ளனர். மேலும் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அடிப்படை ஆதாரமற்ற முறையில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டிற்கு ஜெய்சங்கர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இளைஞர் காங்கிரஸார் வலியுறுத்தி உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மீது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் புகார் அளித்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையே நேரடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?