போதையின் பாதையில் பள்ளி மாணவர்கள்.. பள்ளிக்கல்வித்துறையின் புது முயற்சி.. பெற்றோர்களுக்கு அலர்ட்
மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் பழக்கத்தை தடுக்கும் நடவடிக்கையாக பெற்றோரை வாட்ஸ்அப் குழுவில் இணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகும் அவலம் நிலவுவதாகவும், பள்ளி, கல்லூரிகள் அருகிலேயே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க பல்வேறு தரப்பினரும், தமிழக அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்தால், அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை புது திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி 1.35 கோடி பெற்றோரை வாட்ஸ்அப் குழுவில் இணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பெற்றோரை வாட்ஸ்அப் குழுவில் இணைத்து, மாணவர்கள் போதைப்பொருள் பழக்கம் இருந்தால் அது பற்றியும், அவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்த விவரங்கள், பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அக்குழுவில் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற்றோருக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள பள்ளிக்கல்வித்துறை, வரும் கல்வியாண்டு முதல் இதை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
What's Your Reaction?