கோனியம்மன் கோயில் திருவிழா.. பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்..
கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோயில் திருவிழாவில், இந்து பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் காவல் தெய்வமாக வணங்கப்படக் கூடிய கோனியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டுக்கான தேர் திருவிழா கடந்த 12-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியோடு தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி பூச்சாட்டு விழாவும், 20-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாள்தோறும் யாகசாலை பூஜைகளும், புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை போன்ற வாகனங்களில் அம்மனின் வீதியுலாவும் நடைபெற்று வந்தது. இன்று(28.02.2024) விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு, தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். உற்சவர் கோனியம்மன், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்விழாவில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில் வழங்கினர். கோவை அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக பக்தர்களுக்கு 10,000-க்கும் அதிகமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
What's Your Reaction?