தேனி,விருதுநகர்,தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே..கொட்டித்தீர்க்கப்போகும் கோடை மழை

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை பெய்ய உள்ள தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

May 15, 2024 - 17:49
May 15, 2024 - 18:20
தேனி,விருதுநகர்,தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே..கொட்டித்தீர்க்கப்போகும் கோடை மழை


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கோடை வெப்பம் சுட்டெரித்த பல ஊர்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து. குறிப்பாக பகல் வேளைகளில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த  மூன்று நாட்களாக விட்டுவிட்டு பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதே போல் இன்று பிற்பகல் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலும், தஞ்சாவூர் நகரப் பகுதிகளான பேருந்து நிலையம், மகர்நோன்பு சாவடி, ஆற்றுப்பாலம், புதிய பேருந்து நிலையம், வல்லம், மருத்துவ கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. 

கடுமையான  வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் இந்த மழை பெரிதும் உதவும் என  விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போலகடந்த சில நாட்களாக கோத்தகிரியில் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை நேரத்தில் வெயிலும் மதிய நேரத்தில் மழையும் பெய்து வருகிறது இதனால் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது இன்று மதியம் திடீரென கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது குறிப்பாக டானிங்டன், காமராஜர் சதுக்கம்,மார்க்கெட்,பேருந்து நிலையம்,ராம்சந்த்,போன்ற பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி  நின்றது மழையின் காரணமாக கோத்தகிரியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது மேலும் விவசாயிகள் ,பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (15.05.2024)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி விருதுநகர் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 18 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் 18ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு. 19 ஆம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 19ஆம் தேதி நீலகிரி கோவை தேனி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

தமிழ்நாட்டில் கோடை மழை குறைவாக பெய்துள்ளது. தமிழகத்தில் மார்ச் முதல் தற்போது வரை இயல்பைவிட கோடை கால பருவமழை 
44% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் 99% குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow