430 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் : கடல் சீற்றம், துறைமுகங்களில் புயல் கூண்டு
புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. இதனால் நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்குடி துறைமுகங்களில் 4-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த தித்வா புயல், தற்போது வடக்கு, வடமேற்கு திசையில் நோக்கி மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 540 கி.மீ., தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதன்படி, நாளை மறுதினம் டிட்வா புயல் சென்னையை நெருங்கி வர வாய்ப்புள்ளது. ஆனால், இங்கு கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
டெல்ட் மாவட்டங்களில் கனமழை
புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர், புதுக்கோட்டை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்களில் புயல் கூண்டு
நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்
பாம்பன் கடல் பகுதியில் மணிக்கு 63 கி.மீ. வேகத்தில் காற்று பதிவானதை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து செல்ல வேண்டிய மதுரை பயணிகள் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டது. சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை ராமேஸ்வரம் வர வேண்டிய 3 ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பயணிகள் பேருந்து மூலம் ராமேஸ்வரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
What's Your Reaction?

