கொலை நகரமாகும் தலை நகரம்.. வெளியே வரவே பயமா இருக்கே.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். மாநிலத்தின் தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Apr 29, 2024 - 14:55
கொலை நகரமாகும் தலை நகரம்.. வெளியே வரவே பயமா இருக்கே.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

சென்னையிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பழிக்கு பழியாக ரவுடியை கொன்று உடல் வேறு தலை வேறாக வெட்டி வீசியுள்ளனர். தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்து சமாதியில் வைத்து விட்டு சென்றுள்ளனர் ரவுடிகள். ரத்த சரித்திர கதைகள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில்   சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

சென்னை ஆர்.கே.நகரில் இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை, மீஞ்சூர் பஜார் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு, தண்டையார் பேட்டையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் படுகொலை என தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், கள்ளச்சாராயம், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் அடிக்கடி ஏற்படும் குற்றச்சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அத்துறையை தன் சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல் மக்களின் பொதுநலனுக்காகவும் பயன்படுத்தி, குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

எனவே, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow