விவசாயி வீட்டில் ஐடி ரெய்டு…உண்மை தெரிந்தபின் அதிகாரிகள் செய்த செயல்…

Apr 17, 2024 - 16:24
விவசாயி வீட்டில் ஐடி ரெய்டு…உண்மை தெரிந்தபின் அதிகாரிகள் செய்த செயல்…

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

நாளை மறுநாள் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலசாமி என்ற விவசாயி வீட்டில் கணக்கில் வராத பணம் இருப்பதாக தேர்தல் தொடர்பான நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சிலம்பரசன் தலைமையிலான கண்காணிப்பு படையினர் தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அடைக்கலசாமி வீட்டில்  சோதனை மேற்கொண்டதில் அங்கு சில லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் பேத்தி திருமணத்திற்காக அந்தப் பணத்தை வைத்திருப்பதாக அடைக்கலசாமி தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்யாமல் அங்கிருந்து திரும்பினர். 

இந்த நிலையில், திருச்சியில் இருந்து வந்த வருமான வரித்துறையினர், அடைக்கலசாமியின் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். தேவைப்படும் நேரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கினர். அதேநேரம் அவரது வீட்டில் இருந்து பணம், ஆவணம் என எதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கியுள்ள நிலையில், பணம் பதுக்கல் தொடர்பாக விவசாயி வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow