பாம் வெடிக்கும்… பள்ளிகளை வெல வெலக்க வைத்த மர்ம நபர் யார்?.. 500 நபர்களுக்கு சென்னை போலீஸ் ஸ்கெட்ச்
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து இண்டர்போல் உதவியுடன், கூடுதல் தகவல்களை கேட்டு சென்னை காவல்துறை சார்பில், புரோட்டான் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சோதனையில் அது பொய்யான மிரட்டல் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரித்து வந்த சென்னை போலீசார், சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும் புரோட்டான் இ-மெயில் நிறுவனத்தின் தலைமையிடம், மிரட்டல் விடுத்த இ-மெயிலின் ஐபி முகவரி குறித்த தகவல்களை அளிக்குமாறு, கேட்டிருந்தது. ஆனால், அதற்கு புரோட்டான் நிறுவனம் தகவல்களை தர முடியாது என முதலில் மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வந்த நாளன்று மெயிலை பயன்படுத்திய நபர்களின் விவரங்களை புரோட்டான் நிறுவனம் கொடுத்தது. மேலும், மிரட்டல் விடுக்கப்பட்ட 2 மணிநேரத்திற்குள் இ-மெயிலை பயன்படுத்திய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐபி முகவரிகளை கொடுத்திருந்தது.
இந்நிலையில், தற்போது, குறிப்பிட்ட நேரத்தில் இமெயிலை பயன்படுத்திய 500க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்களை கேட்டு இண்டர்போல் உதவியுடன் சென்னை காவல்துறை புரோட்டான் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதனிடையே, இமெயில் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள சில வழக்குகளையும் மத்திய குற்றப் பிரிவுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதேபோல், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் சைபர் கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?