கலங்கலான குடிநீர்.. கலங்கி நிற்கும் ஊழியர்கள்.. திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையில் அவலம்...
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திண்டுக்கல் பணிமனையில் தரமான குடிநீர் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் பழனி சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மூன்றாவது கிளையில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக் என 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுகாதாரமற்ற முறையிலும் மிகவும் கலங்கலாக உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பலமுறை நிர்வாகத்திடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்தபோதிலும், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் பணிமனை வாயில் முன்பு தொழிற்சங்கத்தினர் தங்களுக்கு நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் குடிநீர் அடங்கிய பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டி தொங்க விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து பணிமனையின் உயரதிகாரிகளிடம் கேட்டபோது, மாநகராட்சி மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீர் கலங்கலாகவே உள்ளது எனவும் அதனை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் எனவும் பதிலளித்தனர்.
What's Your Reaction?