சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கு முடிவு காணும் வரை துணைவேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என உத்தரவாதம் அளிக்க முடியுமா? என கேள்வி

Dec 18, 2023 - 17:53
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்காததை எதிர்த்த வழக்கில் முடிவு காணும் வரை, துணைவேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என உத்தரவாதம் அளிப்பது குறித்து ஆளுநரின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசு, கடந்த செப்டம்பர் 13ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த குழுவினர், மூன்று பேரை தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்னாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் இன்று (டிச 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிப்பது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை ஏற்காத நிலையில், அது அரசை கட்டுப்படுத்தாது என்றார்.ஆனால், யு ஜி சி விதிகளை மாநில அரசு ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, தேர்வு குழுவின் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது? தற்போது துணைவேந்தர் பணியில் உள்ளாரா? பதவிக்காலம் நீடிக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், தற்போது துணைவேந்தராக யாரும் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.இதையடுத்து, இந்த வழக்கு முடிவு காணும் வரை துணைவேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என உத்தரவாதம் அளிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக ஆளுநரின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளைக்கு (டிசம்பர் 20) தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow