சென்னைவாசிகள் காலிகுடங்களுடன் அலைய வேண்டாம் : அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது
வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களும் வேகமாக நிரம்பியது. இதனால் அடுத்த ஆண்டு தலைநகர் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரி ஆகியவை ஏற்கனவே 100 சதவீதம் நிரம்பியது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் நேற்று 100 சதவீதம் நிரம்பியது.
அதன்படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 35 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3231 மில்லியன் கன அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 24 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3645 மில்லியன் கன அடியாக உள்ளது.
சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 12.58 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 532 மில்லியன் கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 35.59 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 464 மில்லியன் கன அடியாக உள்ளது.
ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 11172 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி உருவாக்கப்பட்டு முதல்முறையாக 100 சதவீதம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளும் ஒரே நேரத்தில் 100 சதவீதம் நிரம்பியதும் குறிப்பிடத்தக்கது
What's Your Reaction?

