மெட்ரோ ரயில் பணி.. எந்தப்பக்கம் போனாலும் டேக் டைவர்சன்.. சென்னையின் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சென்னையில் பல பகுதிகளில் சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஒருபக்கம் மெட்ரோ ரயில் பணி மற்றொரு பக்கம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி காரணமாகவாகவும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் 2 வரை, சுமார் 45 கிலோமீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ பாதை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. அதைப் போல பூந்தமல்லி பைபாஸிலிருந்து லைட் ஹவுஸ் வரை சுமார் 27 நிறுத்தங்கள் கொண்ட 26 கிலோமீட்டர் நீள பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில்கள் அமைக்கும் பணி காரணமாக சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக போக்குவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால் ராயப்பேட்டை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஆர்.கே சாலை, டிடிகே சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதி வரை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பாலம் இடிக்கும் பணி நடைபெறுவதால் ஆறு நாட்கள் இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலை இன்று காலையில் இருந்து மூடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சாலை மூடப்பட்டுள்ளதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் ஈகா தியேட்டர் அருகில் உள்ள வாசு தெரு வழியாக புரசைவாக்கம் பகுதிக்கு செல்ல திருப்பி விடப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட மற்ற வாகனங்களும் அதே சாலையில் செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதித்து உள்ளனர். போக்குவரத்து மாற்றம் திடீரென செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும் காலை நேரத்தில் அலுவலகம் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காரணமாக சென்னை சேப்பாக்கம் பகுதியில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து லீக் போட்டிகள், இறுதி போட்டி வரை மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் நடைபெறும் ஏப்ரல் 08, 23, 28 மற்றும் மே 1, 12, 24, 26 ஆகிய தேதிகளில் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் பாரதி சாலை வழியாக வாகனங்கள் வரலாம். அதே நேரத்தில் வாலாஜா சாலையிலிருந்து வர அனுமதியில்லை. கண்ணகி சிலை வழியாக வரும் மாநகர பேருந்துகள் ரத்னா கபே வழியாக திருவெல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு சென்று இலக்கை அடையும். ரத்னா கபே ஜங்சனிலிருந்து வரும் வண்டிகள் பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பில் திரும்பி பெல்ஸ் ரோடு வழியாக வாலாஜா சாலைக்கு செல்லலாம். வாகனங்கள் பாரதிசாலை, பெல்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை செல்ல அனுமதி இல்லை
அண்ணாசில வழியாக வரும் M, T, V எழுத்துகள் கொண்ட பார்க்கிங் பாஸ் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா ரோடு சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். B & R பார்க்கிங் பாஸ் வண்டிகள் வாலஜா சாலை வழியாக அந்தந்த நிறுத்தங்களுக்கு செல்லலாம். அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?