ஜெகன் மோகன் மீது கல்வீச்சு.. நெற்றியை பதம்பார்த்ததால்  தொண்டர்கள் அதிர்ச்சி.. விஜயவாடாவில் பரபரப்பு...

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரசாரம் மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது மர்மநபர் கல்வீசி தாக்கியதால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

Apr 14, 2024 - 08:14
Apr 14, 2024 - 09:27
ஜெகன் மோகன் மீது கல்வீச்சு.. நெற்றியை பதம்பார்த்ததால்  தொண்டர்கள் அதிர்ச்சி.. விஜயவாடாவில் பரபரப்பு...

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக வரும் மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குகள் ஜுன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது. 

ஆந்திராவை பொறுத்தவரை ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனால் ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவி வருகிறது

இந்த நிலையில் முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் உள்ள மேமந்த சித்தம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 13) பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வந்த போது அவர் மீது மர்மநபர் ஒருவர் கல்லை வீசி தாக்குதல் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மர்மநபர் வீசி கல்லானது ஜெகன் மோகனின் இடது கண் புருவத்திற்கு மேலே பட்டு லேசான காயத்தை ஏற்படுத்தியது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். காயத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

தாக்குதல் நடத்திய நபர் யார்? எதற்காக இப்படி செய்தார்? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாக நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கடந்த 2018ஆம் ஆண்டு  விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை உணவக ஊழியர் ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப்பதிவில், "அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நாகரீக்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow