மூள்கிறதா 3-ஆம் உலகப்போர்..? ஈரான் - இஸ்ரேல் மோதல்... அலறும் உலகநாடுகள்...
இஸ்ரேல் விமானப்படை தளத்தை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி இருப்பது அங்கு போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. இதனால், 3-ஆம் உலகப்போர் அச்சம் எழுந்திருக்கும் நிலையில், உலகநாடுகள் பதற்றத்தில் ஆழ்ந்திருக்கின்றன.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் போர் தொடங்கியது. இந்த போரில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த காஸாவில், கடுமையான சேதமும், ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு சில மேற்காசிய நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. தாக்குதலில் நேரடியாக பங்கேற்காமல், ஹவுதி மற்றும் ஹோஸ்பெல்லா படைகளை களத்தில் இறக்கின. இதனால், இந்த போரானது, யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையேயான போராகவும் மாறியது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் தூதரகம் சேதமடைந்தது. இதில், 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் ஈரான் பதில் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 13 நாள் கழித்து இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில், இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சேதம் ஏற்பட்டதாகவும், ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பக்கத்து நாடுகளின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து, போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அமெரிக்க அதிபர் பைடன், வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இதேபோல், ஈரானின் வான்வழி தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தவும் ஐ.நா. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
What's Your Reaction?