இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புப்பேச்சு...பிரதமருக்கு எதிராக காங்., தரப்பிலும் 2,200 பேர் தனியாகவும் ECI-யிடம் புகார்..!
ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் தொடர்பாக வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தியதாக காங்கிரஸ் தரப்பிலும், 2,200 பேர் தனியாகவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளனர்.
கடந்த 21-ம் தேதி ராஜஸ்தானின் பான்ஸ்வாடாவில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது நாட்டின் சொத்துக்களை அடைய இஸ்லாமியர்களுக்கே முன்னுரிமை என காங்கிரஸ் முன்னதாக பேசி வந்ததாகவும், இதனால் உங்களது சொத்துக்கள் ஊடுருவல்காரர்களுக்கும் - அதிக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கும் செல்லும் எனவும் பிரதமர் கூறினார். மேலும் உங்களது வளங்கள் மற்றும் பெண்களின் மாங்கல்யத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கவும் காங்கிரஸ் தயங்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் நேரத்தில் பிரதமர் பதவியில் இருந்துகொண்டு வெறுப்புணர்வுடன் அவர் உரையாற்றியதாக உச்சநீதிமன்றமும் இந்தியத் தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் மதத்தின் அடிப்படையில் ஒரு தரப்பினரை குறிவைத்து தாக்கும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் தரப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, நாட்டின் உயர்பதவியில் இருந்துகொண்டு தனது கட்டுப்பாட்டை அறியாமல் துரதிர்ஷ்டவசமாக பேசிய கருத்துக்களை பிரதமர் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனக் கூறினார்.
இது தவிர பொதுமக்கள் 2,200 பேர் சார்பிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்திய இஸ்லாமியர்கள் மீதான நேரடித் தாக்குதலான பிரதமரின் இப்பேச்சு மிகவும் ஆபத்தானது என அதில் கூறப்பட்டுள்ளது. உலகிலேயே ஜனநாயகத்தின் தாய் என அறியப்படும் இந்தியாவின் மதிப்பை வெறுப்புப் பேச்சால் பிரதமர் நரேந்திர மோடி குறைமதிப்புக்கு உட்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதன் நம்பகத்தன்மையையும் சுயாட்சியையும் கேள்விக்குள்ளாக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?