முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் - நாளை பிரதமரை சந்திக்க திட்டம்
நாளை பிரதமர் மோடியை முதலமைச்சர் நேரில் சந்திக்கும் போது, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கான நிதி வழங்கக் கோரிக்கை வைப்பார் எனக் கூறப்படுகிறது.
சென்னை மெட்ரோ திட்டம், பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி கேட்டு பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் மற்றும் சர்வ சிக்ஷா, ராஷ்டிர மத்யமிக் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சுமக்ர அபியான் என்ற திட்டம் மத்திய அரசால் 2018ம் தேதி மே மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
ஆனால், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு இதுவரை இந்த நிதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேட்டபோது, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் நிதி வழங்கப்படும் எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி, சென்னை மெட்ரோ பணிக்கு நிதி ஆகியவை கேட்கப் பிரதமர் மோடியை டெல்லியில் நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக பிரதமரை சந்திக்க முதலமைச்சர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இந்த நிலையில், நாளை (செப்.27)பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
நாளை பிரதமரை முதலமைச்சர் நேரில் சந்திக்கும் போது தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கான நிதி வழங்கக் கோரிக்கை வைப்பார் எனக் கூறப்படுகிறது.
What's Your Reaction?