சட்டமன்றத்துக்கு வருமா புது கட்டடம்..? ஆளுநர் - சபாநாயகர் இடையே டமால் டுமீல்!
புதுச்சேரி சட்டமன்றத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவது குறித்த விவகாரத்தில் ஆளுநருக்கும் சபாநாயகருக்கும் இடையில் மோதல் போக்கு நிலவுவதால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 200 ஆண்டு கால பழமை வாய்ந்தது புதுச்சேரி சட்டமன்ற கட்டடம். உறுதித்தன்மை இல்லாத நிலையில் கட்டடம் இருப்பதால், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி சபாநாயகர் செல்வம், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து ஒப்புதல் மற்றும் நிதி கேட்டுள்ளார். அதற்கு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்டு திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கோப்பில் கையெழுத்திடாமல் ஆளுநர் தாமதம் செய்வதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த வாரம் பேட்டியளித்த புதுச்சேரி சபாநாயகர் செல்வம், புதிய சட்டமன்ற கட்டடம் தொடர்பான கோப்பிற்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதற்கு, செய்தியாளர்கள் வாயிலாக மறுப்பு தெரிவித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மக்கள் வரிப்பணம் வீணாகக்கூடாது என்பதற்காக கூடுதல் செலவீனங்களைக் குறிப்பிட்டு, கோப்பில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தின் முடிவில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், சட்டமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு 100% நிதி அளிக்கும் நிலையில், ஆளுநர் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று பேசினார். மேலும், கோப்பில் சந்தேகம் இருந்தால், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கோ, தலைமைச் செயலாளருக்கோ அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே வேறொரு நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, முதலமைச்சர் ரங்கசாமி முந்திக்கொண்டு, புதுச்சேரி சட்டமன்றத்திற்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று கூறி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் இந்த மோதல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
What's Your Reaction?