முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகச் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்து வருகிறார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமின் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த ஆக.12ம் தேதி தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் அடங்கிய அமர்வு முன்பு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. தீர்ப்பு காலை 10:30 மணியளவில் வெளியாக உள்ளது.