காய்ச்சலுடன் நடித்த பிரபு... மாலைக்கண் காமெடி உருவான கதை... சின்ன தம்பி ரகசியம் சொன்ன P வாசு

பிரபு நடிப்பில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற சின்ன தம்பி திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படம் உருவான விதம் குறித்து இயக்குநர் பி வாசு மனம் திறந்துள்ளார்.

Apr 13, 2024 - 16:22
காய்ச்சலுடன் நடித்த பிரபு... மாலைக்கண் காமெடி உருவான கதை... சின்ன தம்பி ரகசியம் சொன்ன P வாசு

சென்னை: பிரபுவின் ஆரம்பகால சினிமா கேரியரில் அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் சின்ன தம்பி. பி வாசு இயக்கிய இந்தப் படத்தில் பிரபு ஜோடியாக குஷ்பூ, முக்கியமான கேரக்டர்களில் கவுண்டமணி, மனோரமா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1991ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படம், திரையரங்குகளில் ஒரு வருடங்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. இந்நிலையில் சின்ன தம்பி படம் உருவான விதம் குறித்து நமது குமுதம் சேனலுக்கு மனம் திறந்து பேட்டிக் கொடுத்துள்ளார் இயக்குநர் பி வாசு.  

கேள்வி: சின்ன தம்பி என்றவுடன் இப்பவும் உங்க மனசுல என்னென்ன நினைவுகள் வருது?

பதில்: சொன்னா நம்பமாட்டீங்க.. பல தகராறு, தடைகளுடன் ஆரம்பித்த படம் அது. சின்ன தம்பி பட முன்னேற்பாடுகள் செய்தபோது கோலிவுட்டில் ஸ்டிரைக். என்ன நடக்குமோனு பயந்தோம். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜையை தொடங்க முடியவில்லை. ஒரு கல்யாண மண்டபத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அப்புறம், அவுட்டோருக்கு போய் 7 மணிக்கு படப்பிடிப்பு நடத்த ரெடியாக இருந்தோம். திடீரென அந்த பட தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலு வந்த கார் விபத்துனு செய்தி வர பதறிவிட்டோம். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை, மதியம் தான் படப்பிடிப்பை தொடங்கினோம். இப்படியாக பல தடைகளை தாண்டி வெற்றிப் பெற்ற படம்.  

கேள்வி: பிரபு கூட காய்ச்சலுடன் நடிச்சு கொடுத்தாராமே?

பதில்: “அதை ஏன் கேட்குறீங்க, குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம் பாடலுக்கு தயாரானோம். இசைஞானி அருமையான ட்யூனுக்கு காட்சிகளை ரசித்து படமாக்க ஆர்வமாக இருந்தோம். ஹீரோ பிரபு சாருக்கு 102 டிகிரி காய்ச்சல். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் சில நாட்கள் நடிச்சு கொடுத்தாரு.  அவரு காய்ச்சலுடன் நடித்த பாடல்ன்னு யாரும் நம்ப மாட்டாங்க.  

கேள்வி: படத்துல காதல், சென்டிமென்ட், பாடல் மட்டுமல்ல, காமெடியும் கலக்கல். கவுண்டமணியுடன் பணியாற்றிய அனுபவம்?

பதில்: பொதுவாக என் படங்களுக்கு நானே காமெடி ட்ராக் எழுதிடுவேன். இந்த படத்துல வீரப்பன்ங்கிற மூத்த எழுத்தாளர் இணைந்தார்.  இன்னும் சொல்லப்போனால் காமெடி ட்ராக் எழுதுவதில் அவரை அடிச்சுகிட ஆளே கிடையாது. நாகேஷ் காலத்தில் இருந்து இருந்தாரு. அவருதான் கவுண்டமணிக்கு தனிப்பட்ட முறையில் ட்ராக் எழுதிட்டு இருந்தாரு. அந்த படங்கள் சூப்பர் ஹிட். முதல்முறையாக என்னுடன் அவர் சேர்ந்தாரு. இரண்டு பேரும் இணைந்து நிறைய டிஸ்கசன் செய்து காமெடி காட்சிகளை உருவாக்கினோம். இன்னிக்கும் மன்னன், நடிகன் மாதிரி சின்ன தம்பி பட காமெடிகளும் வெகுவாக கொண்டாடப்படுது.  

கேள்வி: சரி, அந்த மாலை கண் நோய் காமெடி கரு எப்படி உருவானது? 

பதில்: முக்தா சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்தது தவப்புதல்வன்ங்கிற படம். அதுல மாலைக்கண் நோய் வந்தவராக நடிச்சிருப்பாரு. அது சீரியசான சப்ஜெக்ட். அந்த கருவை கொஞ்சம் மாத்தி காமெடி ட்ராக் எடுக்கலாம்னு வீரப்பன் சொன்னாரு. அப்படி உருவானது அந்த மாலைக்கண் காமெடி.

 

கேள்வி: கவுண்டமணி செட்டுல எப்படி இருப்பாரு… பண விஷயத்தில் கறார் பேர்வழினு சொல்றாங்களே..?

பதில்: சே...தவறான தகவல். என் படங்களில் நடிக்க ஒரு ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் வாங்குவாரு. படம் முடியும்போது தான் முழு சம்பளம் வாங்குவாரு. எனக்கு கொடுக்கிற சம்பளம் படப்பிடிப்பு செலவுக்கு பயன்படட்டும், முதல்லே சம்பளம், அட்வான்ஸ் அதிகம் வாங்கினால் தயாரிப்பாளர்களுக்கு வட்டி எகிறும் சொல்வாரு. அவருக்கு மேனேஜர் கிடையாது. ஆனாலும், அவரே தன் கால்ஷீட்டை பார்த்துகிடுவாரு. ஆனாலும், எந்த குழப்பமும் வராது. அவருகிட்ட பத்துநாட்கள் கால்ஷீட் வாங்கினால், அதென்ன பத்துநாட்கள். அப்ப, எனக்கு காமெடி குறைவாக இருக்குமே. என் போர்ஷனை குறைக்குறீங்களா? இருபது நாட்கள் தர்றேன். நிறைய காமெடி சீன் எடுங்கன்னு உரிமையுடன் சண்டைபோடுவாரு.  

கேள்வி: சின்னத்தம்பி காமெடி இன்னிக்கும் பேசப்படுதே?

பதில்: ஒவ்வொரு சீனையும் ரசித்து எடுத்தோம், ஒவ்வொரு டயலாக்கையும் யோசித்து எழுதினோம். சின்ன தம்பிக்காக இன்னும் பல சீன்களை எடுத்தோம். அதையெல்லாம் இட பற்றாக்குறை காரணமாக படத்துல சேர்க்க முடியலை. குறிப்பாக, கழுதையை வெச்சு ஒரு செம காமெடி எடுத்தோம். கழுதை உதைக்கும். அப்ப, ஒரு விரல் கிருஷ்ணாராவ் கழுதை கெட்டால் குட்டிச்சுவர்னு டயலாக் பேசுவாரு. உடனே கவுண்மணி பொங்கி, கழுதைக்கு ஆதரவாக பேசுவாரு. ‘‘எந்த கழுதையாவது அடுத்தவன் குடும்பத்தை கெடுத்ததா? குடிச்சு சீரழிந்ததா? யார்கிட்டயாவது கடன் வாங்கிட்டு ஏமாத்திவிட்டு ஓடிப்போனதா? அப்ப, ஏன்டா தேவையில்லாமல் கழுதையை வம்புக்கு இழுக்குறீங்க. இனி கழுதையை பத்தி பேசினால் கடுப்பாகிடுவேன்’’னு திட்டுவாரு. எனக்கும் கவுண்டமணிக்கும் நல்ல நட்பு உண்டு. நடிகன், வால்டர் வெற்றிவேல், மன்னன்னு என்னுடைய படங்களில் அவர் காமெடி இன்னிக்கும் பேசப்படுது. வீரப்பன் மாதிரியான திறமையான எழுத்தாளர்கள் இப்ப நம்மகிட்ட இல்லை. அது தமிழ் சினிமாவுக்கு இழப்பு. சின்னத்தம்பி 33வது ஆண்டாக பேசப்படுவது மகிழ்ச்சி’’ என்று முடித்தார் பி.வாசு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow