ஜாபருக்கு நிரந்தர சிறை..? ED-யிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில், பிப்ரவரி 15ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதைப்பொருள் சிக்கியது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பதும், அவர் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருட்களை பல நாடுகளுக்கு கடத்தி இருப்பதும் தெரிய வந்தது.
சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், திமுகவில் முக்கிய பதவியிலும் இருந்து வந்தார். அவர் உணவு ஏற்றுமதி என்ற பெயரில் பல வெளிநாடுகளுக்கு போதைப்பொருளை கடத்தி, அதனை சினிமா மற்றும் அரசியலுக்காக பயன்படுத்தி வந்ததும் என்சிபி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் மார்ச்-9ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர். அதையடுத்து, அவருக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கும் இதில் தொடர்ப்பிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள என்.சி.பி அலுவலகத்தில் நேரில் ஆஜாராகி விளக்கமளிக்கும்படி அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் முதலில் ரம்ஜானை காரணம் கூறி விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரிக்கை வைத்தாலும், அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தை அடுத்து, ஏப்ரல் 2ஆம் தேதி நேரில் ஆஜாரானார்.
அப்போது, இயக்குநர் அமீரிடம் என்.சி.பி அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில், எப்படி தொழில் ரீதியில் ஜாபர் சாதிக்குடன் பழக்கம் ஏற்பட்டது என்பது முதல் எந்தெந்த முதலீடுகளை ஜாபர் சாதிக் செய்தார் என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் மற்றும் தனியார் ஓட்டல் உரிமையாளர் என சென்னை சாந்தோம், புரசைவாக்கம் மற்றும் திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 30க்கு மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தற்போது அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தையே புரட்டிப்போட்ட வழக்கில் மீண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
What's Your Reaction?