புழல் சிறையில் பெண் கைதிகள் இடையே மோதல்: திருநங்கை மீது வழக்கு பதிவு
புழல் சிறையில் பெண் கைதிகள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திருநங்கை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் பெண் கைதிகளை அடைக்க தனிச் சிறை உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் பெண்கள் புழல் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையின் 6-வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள திருநங்கை அபி என்ற ராஜேஷுக்கும் (36), வின்சி லவ்லி (27), மஞ்சு (26) ஆகிய கைதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது மோதலாகவும் மாறியுள்ளது.
தண்ணீர் பிடிக்கும் குவளையால் திருநங்கை அபி தாக்கியதில், வின்சி, மஞ்சு ஆகிய 2 பேருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் காயம் அடைந்த பெண் கைதிகள் இருவரும் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் சிறைத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில், திருநங்கை அபி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?

