காணாமல் போனது "250 சவரன் அல்ல..450 சவரன்"...போலீஸ் வீட்டிலே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..கதறும் பெண் காவல் ஆய்வாளர்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெண் காவல் ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து 3.6 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

May 11, 2024 - 20:16
காணாமல் போனது "250 சவரன் அல்ல..450 சவரன்"...போலீஸ் வீட்டிலே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..கதறும் பெண் காவல் ஆய்வாளர்..

அலங்காநல்லூரை அடுத்த பாசிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளாராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதைக்கண்ணன் 30 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கணவர் கத்தாரில் பணிபுரிந்து வரும் நிலையில், மகன் சென்னை தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஷர்மிளா கடந்த 8-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டிற்கு மகளுடன் சென்றுள்ளார். 

தனது தந்தை வீட்டில் இருந்தே ஷர்மிளா காவல் நிலையம் சென்று வந்த நிலையில், நேற்று (மே 10) பணி முடிந்து நள்ளிரவு பாசிங்காவுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 450 சவரன் அதாவது 3 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

உடனடியாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஷர்மிளா புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார்  கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ஷர்மிளா வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டில் மர ஜாமான் வேலை நடைபெற்று வருவதால் கடந்த 10 நாட்களாக சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என ஷர்மிளா புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆய்வாளர் ஒருவரது வீட்டில் 450 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow