அமீர் குறித்து கருத்து:வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா - விடாத சசிகுமார்

பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?

Nov 29, 2023 - 14:40
Nov 29, 2023 - 14:45
அமீர் குறித்து கருத்து:வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா - விடாத சசிகுமார்

இயக்குனர் அமீர் குறித்த கருத்துக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்த நிலையில், போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பருத்தி வீரன் பட விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதி ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாரதி ராஜா அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீர் குறித்த கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி! என கூறியுள்ளார்.

அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசியதற்கு ஏற்கனவே இயக்குனரும், நடிகருமான சசிகுமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், சசிகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?

'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்...' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்' என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு? என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்னும் நீண்டுகொண்டே போகிறதோ என்று தோன்றுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow