Rewind: “புத்தருக்கு தியானம்: எனக்கு எழுத்து!"- ஜெயமோகன் (பாகம் 1)
26.10.2000 அன்று குமுதம் இதழிலில் வெளிவந்த பேட்டி
“புத்தருக்கு தியானம்: எனக்கு எழுத்து!"
- ஜெயமோகன்
26.10.2000 அன்று குமுதம் இதழிலில் வெளிவந்த பேட்டி
பத்து வருஷங்களுக்கு முன் வெளிவந்த இவரது 'ரப்பர்' நாவலிலிருந்து சமீபத்தில் வெளிவந்த ’கன்னியாகுமரி' நாவல் வரை இலக்கிய உலகில் அதிக சர்ச்சைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர். 91ல் 'கதா' விருதும், 93ல் சம்ஸ்கிருதி சம்மான் என்கிற தேசிய விருதையும் பெற்றிருப்பவர். மலையாளத்திலும் பிரபல்யம். கதை, நாவல், விமர்சனம் என்று இதுவரை பதினொரு தொகுப்புகளைத் தமிழில் தந்திருக்கிற இவரது தாய்மொழி மலையாளம். தொலைபேசித் துறையில் வேலை செய்கிற இவருக்கு வயது முப்பத்தெட்டு.
நாகர்கோவில்.
நகர்ப்புறச் சந்தடியிலிருந்து ஒதுங்கி சற்று அமைதியாக இருக்கிற தெரு. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிற வீடு. மாடியில் ஓலைக் கீற்றுகளுடன் ஒரு கொட்டகை. சுற்றிலும் பார்த்தால் பச்சை பரவிக் கிடக்கிற மலை முகடு; தூரத்தில் மலைச் சரிவில் வெளிச்சக் கலங்கலாகக் கீழிறங்கும் சூரியன்; வர்ணமயமாகக் குழம்பிக் கிடக்கிற வானம்; சில்லென்ற காற்று. இந்தச் சூழ்நிலையில் சந்திக்கிறோம் ஜெயமோகனை.
மெல்ல சூழ்நிலை மாறி மங்கலான இருட்டு படர்கிற வரை வெவ்வேறு முகபாவங்கள்; சட்டென்று முகத்துக்கு ஏறும் கொந்தளிப்புகள்; தன் வாழ்க்கையைச் சொல்லும்போது குரலில் வெளித் தெரிகிற பதற்றங்கள்- இவற்றுடன் இலக்கியம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பிரத்யேக மொழியுடன் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீண்டது அவருடனான பேட்டி:
அதிலிருந்து சில பகுதிகள்:
"வாழ்க்கையின் எந்தவிதமான நெருக்கடி உங்களைப் படைப்புலகம் பக்கம் திருப்பியது? அல்லது எந்தவிதமான அடையாளத்தைப் பெறவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உங்களது எழுத்துக்குப் பின்புலமாக இருந்திருக்கிறது?"
"எனக்கு ஆரம்பத்திலிருந்து திருப்தியாகச் செய்யக்கூடிய காரியமாக எழுத்துதான் இருந்திருக்கிறது.
சிறுவயதில் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த நாட்களிலேயே நிறைய எழுதியிருக்கிறேன். ஒன்பதாவது வகுப்புப் படிக்கும்போது நான் எழுதிய கதை குமுதத்தில் பிரசுரமாகியிருக்கிறது. பல புனைப்பெயர்களில் ஏகப்பட்ட கதைகள்- சுமார் எண்பது வரை- பல பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன். கதைக்கு ஐம்பது, அறுபது ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தில் திருவனந்தபுரம் போய் சினிமா பார்த்துவிட்டு புரோட்டா சாப்பிட்டு விடுவேன். புரோட்டா மீது அப்போதே ஒரு காதல் உண்டு.
நிறையப் படிப்பேன்; பல புத்தகங்கள். ஒரு கட்டத்தில் சாண்டில்யன் மீது ஒரு மோகம் இருந்தது, பிறகு கல்லூரி நாட்களில் எனது ஹீரோ ஜெயகாந்தன். இப்போது மனதில் அடுக்குகள் மாறினாலும் ஜெயகாந்தன் அதே நிலையில் இருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் ஒரு நெருக்கடியான விஷயம் உருவாயிற்று. எனக்கு நெருக்கமான நண்பராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். ரப்பருக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை ’ஆஸிட்'டைக் குடித்திருந்தார். அது கொடூரமான மரணம், குடல் எல்லாம் வெந்து வாயிலிருந்து மாம்சம் பிய்ந்து தெறித்தது. நானும் அவனும் முந்தின தினம் இரவு வரைக்கும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு அவன் கிளம்பிப் போனான். போய் ஒரு மணிநேரத்தில் அவன் சீரியஸாக இருக்கிற இந்தச் செய்தி. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகும் வழியிலேயே இறந்துவிட்டான்.
மரணத்தின் குரூரம்; மரணத்தின் மூலம் ஒருவன் முழுக்க இல்லாமல் போய்விடுகிற வெறுமை; எவ்வளவுதான் இரண்டு ஆத்மாக்கள் நெருக்கமாக இருந்தாலும் மரண அவஸ்தையைக் கூடச் சொல்ல முடியாத அளவுக்கு இருந்த இடைவெளி; இதெல்லாம் எனக்குப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மன அளவிலும் நிலைகுலைந்து போயிருந்தேன்.
இந்த நேரத்தில்தான் ஆன்மிகமான ஈடுபாடு வந்தது. முதலில் கோயில்களுக்குப் போய், பிறகு தத்துவங்களின் பக்கம் போய் அரவிந்தரிலிருந்து ஆரம்பித்து, ரமணர் என்று படிப்படியாகத் தேடல் வளர்ந்தது. இந்த காலகட்டத்தில் எழுத்து முழுக்க இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு வரை என்னை எழுத வைத்திருக்கிற கேள்விகள் இந்தக் காலகட்டத்தில்தான் உருவானதென்று நினைக்கிறேன்.
கல்லூரியில் கடைசி வருஷம் துறவு மனப்பான்மையில் எனது வீட்டை விட்டுப் போய்விட்டேன். மதுரை திருவேடகம், திருச்சி என்று பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்தேன். இப்படி மூன்று வருஷங்கள் பல்வேறு இடங்களில் பல அனுபவங்கள்."
"ஏன் துறவு கொள்கிற அளவுக்கு மனநிலை உருவானது?"
"திரும்பத் திரும்ப மரணம் பற்றின கேள்விதான். என்னுடைய கன்னியாகுமரி நாவல் தவிர மற்ற என்னுடைய எல்லாப் படைப்புகளிலும் அடிப்படையில் மரணமும், அதற்கு முன் உறவுகளுக்கு, இருத்தலுக்கு இருக்கிற அர்த்தங்களும்; அது குறித்த விசாரணைகளும் வெளிப்பட்டிருக்கின்றன.”
துறவு பூணச் சென்ற பிறகு எப்படித் திரும்பி வந்தீர்கள்?
“துறவு மனநிலையில் போய் சுவாமி சித்பாவனந்தருடன் சில நாட்கள் இருந்தேன்.
நீ எடுத்துப் படிக்கிற புஸ்தகங்களையெல்லாம் பார்த்தேன். கதைப் புஸ்தகங்களைத்தான் பார்க்கிறே.. ஆன்மிகம், தியானம் எல்லாமே கணக்கு மாதிரி ’லாஜிக்'கலான விஷயங்கள். நீ முழுக்க முழுக்கக் கற்பனையில் இருக்கே... நீ கதை, கவிதைகள் எழுதத்தான் லாயக்கு உண்மையை அடைவதற்கு ஒரு பயணம் உண்டென்றால் அது உனக்குக் கற்பனை வழியாகத்தான் சாத்தியம். துறவெல்லாம் உனக்கு ஒத்துவராது. வீட்டுக்குப் போய் விவசாயம் ஏதாவது பண்ணு" என்றார்.
எனக்கு அப்போது அவர் மீது கடுமையான கோபம் வந்தது. எனக்குச் சாப்பாடு போடத் தயங்கித்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நினைத்தேன். வெகு நாட்களுக்குப் பிறகுதான் அவர் சொன்னது உண்மை என்று தெரிய வந்தது.”
தொடரும்..
What's Your Reaction?

