இந்தி கற்காததால் தமிழகம் தனித்துப் போகாது - கம்யூனிஸ்ட் முத்தரசன்
இந்தி கற்காததால் தமிழகமும் தனித்துப் போகாது தமிழக மாணவர்களும் தனித்து போக மாட்டார்கள். என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று கும்பகோணம் வருகை தந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தி கற்காவிட்டால் தமிழ்நாடு தனித்துப் போகும் என்று பேசியதைப் பற்றி அவரிடம் கேட்ட போது...
“தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, சென்னை தூர்தர்சன் விழாவில் கலந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும் போது ஒரு வரியை தவிர்த்து விட்டு பாடிய செயல், எதிர்பாராமல் நடந்தது அல்ல, இதற்காக தனது பதவி நீடிக்கப்பட்டுள்ளதா ? இல்லையா என்று தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அவர் மன்னிப்புக் கோர வேண்டும். இப்படி நடந்து கொண்ட ஆளுநரை குடியரசுட்ஜ் தலைவரும், மத்திய அரசும் பணி நீக்கம் செய்ய வேண்டும், அல்லது அவரை தமிழகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.
நேற்று தமிழ்ப் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது கூட ஆளுநர் ஆர் என் ரவி, இந்தி கற்காவிட்டால் தமிழகம் தனித்து போகும் இந்தியை கற்று இந்தியாவுடன் இணைந்து போக வேண்டும் என்ற ரீதியில் பேசியுள்ளார். ஒருபோதும், இந்தி கற்காததால் தமிழகமும் தனித்து போகாது, தமிழக மாணவர்களும் தனித்து போக மாட்டார்கள்.” என்று கூறினார்.
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் அமைப்புகள் முன்னின்று நடத்துகையில் திமுக அரசைக் கண்டித்துப் பேசியதை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுகவுக்கு பிளவு ஏற்படுமா என அவரிடம் கேட்ட போது.. “திமுகவுடன் கம்யூ கட்சிகளுக்கு எந்தவிதமான முரண்பாடும் இல்லை, அப்படி முரண்பாடு ஏற்பட வேண்டும் என்பது சிலரின் விருப்பம், ஆசை, கனவு. நேற்று இருந்தை போல தான் இன்று இருக்கிறோம். இந்த அணி தொடரும், அணி மேலும் வலுப் பெற்றுள்ளது.” என்றவரிடம் இந்தி மாதம் கொண்டாடப்படுவது குறித்துக் கேட்டதற்கு... “இந்தி மாதம் கொண்டாடுவதில் எந்தவித தவறும் இல்லை, இந்தி மொழிக்குத் தரும் அதே அளவு முக்கியதுவத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 22 மொழிகளுக்கும் கொடுங்கள் என்று தான் வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.
What's Your Reaction?