தமிழக ஆளுநர் பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது - நாராயணசாமி
தமிழக ஆளுநர் தமிழக வளர்ச்சிக்கோ, மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “இந்தியா வளர்ந்து வரும் நாடு என சொல்லி விட்டு 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். நாடு வளர்ந்து வரும் என்றால், இலவச அரிசித் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த அவசியமில்லை. 80 கோடி பேருக்கு இலவச அரிசி தருவதற்கு மோடி இன்னும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்துள்ளார். பட்டினியால் வாடும் நாடுகள் 112ல் இந்தியா 105ல் உள்ளது. இதற்கான ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவில் 27.3 சதவீதம் பேர் ஏழைகள். காங்கிரஸ் ஆட்சியில் 19 சதவீதமாக இருந்த சதவீதம் தற்போது உயர்ந்துள்ளது. இது பொருளாதார வீக்கம்” என குற்றம் சாட்டினார்.
தமிழக ஆளுநர் திராவிடம் என்கிற வார்த்தையை தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து தவிர்த்தது குறித்து அவரிடம் கேட்டதற்கு “தமிழக ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் திராவிட வார்த்தை நீக்கப்பட்டு ஒலிபரப்பனாது. இது கொடுமை. ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய பிரச்னைகளை முன்வைத்து தமிழர்களை அவமதித்து தமிழக அரசுக்கு தினமும் தொல்லை தருகிறார். ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துகிறார். மத்திய அரசின் கைப்பாவையாக இருந்து பிரதமருக்கு சேவகம் செய்கிறாரே தவிர, தமிழக வளர்ச்சிக்கோ, மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை. அவர் பாரபட்சமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அதனால் ஆளுநர் ரவியைத் திரும்ப பெறவேண்டும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து “புதுச்சேரியில் கோயில் நிலத்தை பட்டா மாற்றி விற்பது சகஜமாகிவிட்டது. இதற்குக் கடும் நடவடிக்கை தேவை. காமாட்சியம்மன் கோயில் சொத்து அபகரித்தோர் மீது மேல்கட்ட விசாரணை நடக்கவில்லை. எதைப் பற்றியும் முதல்வரும், அமைச்சர்களும் கவலைப்படவில்லை. இவர்களை வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை. புதுச்சேரி அரசு ரேஷன் கடை திறப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி. இது மக்கள் கோரிக்கை. தொடர்ந்து செய்யவேண்டும், அறிவித்தப்படி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு ஆகியவற்றையும் தரவேண்டும்” என்று கூறினார்.
What's Your Reaction?