தீராத ஆன்லைன் ரம்மி மோகம்.. உயிர்களை காவு வாங்கும் சோகம்.. தீர்ப்பை பெறுமா தமிழக அரசு?
தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது ஆன்லைன் ரம்மி. தற்போது இந்த விளையாட்டின் மோகத்தால் மேலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமு (38). திருமணம் ஆகாத இவர், அரக்கோணம் பழனிப்பேட்டையில் போண்டா கடை நடத்தி வந்துள்ளார். ஆனால் வியாபாரத்தில் கவனம் செலுத்தாத ராமு, அவ்வப்போது வீட்டிற்குத் தெரியாமல் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டதாக தெரிகிறது. மேலும் இதற்காக அவர் தனியார் வங்கிகள் மற்றும் தெரிந்தவர்கள் என பலரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
கடன் வாங்கியதை அறிந்த ராமுவின் குடும்பத்தினர் அவரது செல்போனை பிடுங்கி உடைத்த நிலையில், சில நாட்கள் அமைதியாக இருந்த ராமு, மீண்டும் கடன் வாங்கி புது செல்போன் மூலம், ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பிக் கேட்க, கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும், ஆன்லைன் ரம்மி மோகத்தில் இருந்து வெளிவர முடியாமலும், தவித்து வந்துள்ளார் ராமு. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர், வீட்டில் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிவிட்டு, போளூர் அருகே உள்ள விவசாய கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து ராமுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அரக்கோணம் தாலுகா போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பல உயிர்களை இழந்து அவர்களது குடும்பம் நிற்கதியாய் நிற்கும் நிலையில், மேலும் ஒரு உயிர் பலி ஆகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே, பெருங்குடி ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான குருராஜன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கள்ளக்குறிச்சி மாவட்டம் வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயராமன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது திருத்தணியை சேர்ந்த ராமு தற்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆன்லைன் ரம்மியால் அப்பாவி உயிர்கள் அடுத்தடுத்து பறிபோவதை தடுக்க ஒரே வழி, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை தடை செய்ய முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை, தமிழக அரசு துரிதப்படுத்தி, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுப்பது தான் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?