உதகையை ஆட்டம் காணவைத்த வெயில் .. பாளம் பாளமாய் வெடித்த அணைகள்.. கருவாடாகிப் போன மீன்கள்..

May 3, 2024 - 18:48
May 3, 2024 - 19:50
உதகையை ஆட்டம் காணவைத்த வெயில் .. பாளம் பாளமாய் வெடித்த அணைகள்.. கருவாடாகிப் போன மீன்கள்..

நீலகிரி மாவட்டம் உதகையில் கடுமையான வெயில் தாக்கத்தினால் முக்கிய அணைகளில் தண்ணீர் வற்றி பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது. இந்த நிலையில் கோடை காலம் வந்தாலே மக்கள் விரும்பிச் செல்லும் குளிர்ச்சி மிகுந்த பகுதியான உதகையையும் வெயில் விட்டுவைக்கவில்லை. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் வற்ற தொடங்கியுள்ளது. குறிப்பாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு குந்தா அணையில் தண்ணீர் வற்றி பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் இன்றி தரை, பாளம் பாளமாய் வெடித்தும், மீன்கள் உயிரிழந்து கருவாடாகிக் கிடக்கின்றன. 

மேலும், அப்பர் பவானி, பார்சன்ஸ் வேலி, எமரால்டு, அவலாஞ்சி, காட்டுக்குப்பை உள்ளிட்ட முக்கிய நீர்மின் நிலையங்களில்  உள்ள அணைகளிலும் தண்ணீர் வற்றி வருகிறது. 

அணைகளில் தண்ணீர் குறைவாகவே உள்ள நிலையில், பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்த நிலையில், உதகையில் சில நிமிடங்கள் மட்டுமே மழை பெய்து மக்களை ஏமாற்றி வருகிறது. இந்தக் கோடை வெயில் உதகையையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், மழை பெய்யவில்லை என்றால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow