ஊழல் வாதிகளை காப்பாற்றவே பேரணி - காங்கிரஸ் மீது பிரதமர் சாடல்..

Apr 7, 2024 - 04:07
ஊழல் வாதிகளை காப்பாற்றவே பேரணி -  காங்கிரஸ் மீது பிரதமர் சாடல்..

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி பேரணிகளை நடத்தவில்லை, ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே நடத்துகிறது என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் ஏப்ரல் 19-ம் தேதி 12 மக்களவை தொகுதிகள் மற்றும் ஏப்ரல் 26-ம் தேதி 13 மக்களவைத் தொகுதிகள் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுப்பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, "காங்கிரஸ், குடும்பம், அரசியல் மற்றும் ஊழல்வாதிகளின் கட்சி. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி பேரணிகளை நடத்தவில்லை. ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே நடத்துகிறது. ஊழலுக்கு எதிரான மோடியின் போராட்டம் தொடரும்" எனக் கூறினார். 

என்னைத் திட்டுவது தான் காங்கிரஸ் தலைவர்களின் அரசியல் உத்தி. நாட்டில் கிராமங்கள் மற்றும் ஏழைகளுடன், நான் பாறை போல உறுதியுடன் நிற்பதால் என் மீது காங்கிரஸ் கட்சியினர் கோபத்தில் உள்ளனர். அவர்கள் அரசுப் பணத்தைக் கொள்ளையடிப்பதை தங்களது பரம்பரை உரிமையாகக் கருதினர். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் கொள்ளை நோயை நிரந்தரமாக குணப்படுத்தியுள்ளேன். அதனால் தான் அவர்கள் அச்சப்படுகிறார்கள் என தெரிவித்தார். 

ஊழலை அகற்றுங்கள் என்று நான் சொல்கிறேன், ஆனால் I.N.D.I.A. கூட்டணி கட்சியினர் ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு தாமரை மலரும். 3-வது முறையாக நான் பிரதமராக பதவியேற்ற உடன் முதல் 100 நாட்களில் ஊழலுக்கு எதிராக இன்னும் பெரிய முடிவுகளை எடுக்க பாஜக தயாராகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது ட்ரெய்லர்தான்" எனவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். 

நாட்டில் எத்தனை தசாப்தங்களாக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்து வந்தது. கூட்டணி அரசுகளால் நாட்டின் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்து காங்கிரஸ் அக்கறை கொள்ளவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு தலைமுறை தலைமுறையாக லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கை காங்கிரசால் பாதிக்கப்பட்டது. ஆனால் இன்று நமது பெண்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கிறார்கள். இஸ்ரோவின் முக்கிய திட்டங்களை கையாளுகின்றனர். உலகிலேயே அதிக சதவீத பெண் விமானிகளை இந்தியா கொண்டுள்ளது " என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow