ஐபிஎல் : பெங்களூரை வீழ்த்திய ராஜஸ்தான்...விராட் கோலியின் அதிரடி ஆட்டம் வீணா போச்சு..

Apr 7, 2024 - 06:12
ஐபிஎல் : பெங்களூரை வீழ்த்திய ராஜஸ்தான்...விராட் கோலியின் அதிரடி ஆட்டம் வீணா போச்சு..

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தி 4வது வெற்றியை பெற்றுள்ளது. 

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று(ஏப்ரல்-6) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் 19-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில், பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு பிளஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். முதல் 6 ஓவர்கள் பவர் பிளேயில் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி 125 ரன்கள் வரை குவித்தனர். 14-வது ஓவரில் பாப் டு பிளஸ்சிஸ் அடித்த பந்து பவுண்டரி எல்லையில் இருந்த ஜோஸ் பட்லரிடம் சிக்கிய நிலையில் 44 ரன்களில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதையடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன் மட்டுமே அடித்து மோசமாக அவுட் ஆனார். தொடர்ந்து செளரவ் செளகான் களமிறங்கி 9 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதுவரை பொறுமையாக ஆடி ரன் ரேட்டை உயர்த்தி வந்த விராட் கோலி 19-வது ஓவரில் சதம் அடித்து விளாசினார். இது ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி அடித்த 8வது சதம். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை குவித்தது. அணியின் வெற்றிக்காக போராடிய விராட் கோலி 113 ரன்களும், கேமரூன் கிரீன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதேநேரம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், நன்ரே பர்கர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 184 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கிய நிலையில் 2-வது பந்திலேயே ஜெய்ஸ்வால் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்கி ஜோஸ் பட்லருடன் இணைந்து இருவரும் பந்துகளை பறக்க விட்டனர். 14.4-வது ஓவரின் போது 69 ரன்கள் அடித்திருந்த சஞ்சு சாம்சன் முகமது சிராஜ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.  அடுத்தடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்களிலும், துருவ் 2 ரன்களிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். 

ஆனால், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர், 9 பவுண்டரி, 4 சிக்சர் என 100 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 19.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வென்று 8-வது இடத்தில் உள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி அடித்த சதம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு பலனளிக்காமல் போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow