வங்கக்கடலில் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்: 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது இன்று (அக்.26) ‘அர்னாப்’ புயலாகவும், நாளை (அக்.27) தீவிர புயலாகவும் உருவெடுக்கக்கூடும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே 28-ம் தேதி முற்பகலில் மிக தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 115 முதல் 140 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இதனிடையே, லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி கேரளாவுக்கு நகர்ந்து, அங்கிருந்து வட தமிழகக் கடலோரப் பகுதி வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி,
மிக கனமழை எச்சரிக்கை: இன்று புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மிதமான மழை: ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (அக்.27) ராமநாதபுரத்தில் கனமழையும், தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும் தொடரும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் அடுத்தடுத்த நாட்களிலும் தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?

