உருவானது டிட்வா புயல் : அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
வங்கக் கடலில் டிட்வா புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த புயல் தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
டிட்வா புயல் சென்னைக்கு 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சூறாவளி புயலாக (டிட்வா) தீவிரமடைந்து, இன்று, நவம்பர் 27, 2025 அன்று காலை 11.30 மணிக்கு அதே பகுதியில் பொத்துவில் இலங்கைக்கு கிழக்கே நெருக்கமாகவும், மட்டக்களப்பிலிருந்து(இலங்கை) 90 கிலோ மீட்டர் தென்கிழக்கே, ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், திருகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 610 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை வழியாக நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதல்வர் அவசர ஆலோசனை
தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைசெயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், வருவாய் துறை செயலாளர் அமுதா. காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முகாம்களை தயார் நிலையில் வைத்தல், மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார்நிலை, பேரிடரை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து அந்த அந்த மாவட்டங்களுக்கு செல்லும்படி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?

