தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.. சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி வெயிலைத் தாண்டி தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. தேசிய தலைவர்களும் மாநிலத்தலைவர்களும் தமிழ்நாட்டை முற்றுகையிட்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். வரும் 19ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று (17-04-2024) மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு தமிழ்நாட்டில் பிரச்சாரம் நிறைவு பெற வேண்டும் என்றும், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
பிரசாரம் ஓய்ந்த பிறகு யாரும் எந்த வகையிலும் வாக்கு சேகரிக்க கூடாது. வாக்காளா்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணுக்கு முன்னதாக மாவட்டத்துக்கான STD தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அழைக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்காக 1 லட்சத்து 59 ஆயிரத்து 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு கருவிகளும், 88,783 விவிபேட் (வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ காலமானதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கான பூத் சிலிப் 92.80 % கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடையும் என்றும் தெரிவித்தார். சிவிஜில் செயலி மூலம் இதுவரை 4100க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கூறிய அவர், பூத் சிலிப்கள் வழங்கும் பணிகள் நிறைவுற்றதாக கூறினார். மேலும் விடுபட்டவர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூத் சிலீப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். தேர்தல் நாள் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேர்தல் பிரசாரம் ஓய்வடைந்ததற்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரசாரம் செய்யக்கூடாது. மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
What's Your Reaction?