போதைப்பொருள் - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ் - பாஜக ஆளும் மாநிலங்களிலும் அப்படித்தான்...
திமுக அரசு செயலற்ற அரசாக உள்ளது. தமிழ்நாடு காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது - எடப்பாடி பழனிசாமி
போதைப் பொருள் பறிமுதல் விவகாரத்தில் அதிமுக குறித்து அண்ணாமலை பேசியதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி, பாஜக ஆளும் மாநிலத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்..
சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நோன்பு திறந்தார். இதையடுத்து விழா மேடையில் உரையாற்றிய அவர், "அதிமுக கடமைகளில் ஒன்று இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்கி வருவது என கூறினார். அதிமுக ஆட்சியின் போது சட்டம் - ஒழுங்கு பேணி பாதுகாக்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று திமுக ஆட்சியில் சிறுபான்மை உட்பட அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை மாற ஒற்றுமையுடன் பணியாற்றி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம். தீய சக்திகளை அகற்றுவோம்" எனக் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், "அதிமுக ஆட்சியில் இருந்தபோது போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டது எனவும், டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து திறக்கப்பட்டதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், "நாங்கள் ஆளும்போது அதுபோன்ற புகார் வரவில்லை. அப்படி பார்த்தால் பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் அப்படித்தான் உள்ளது. இன்று (மார்ச் 13) கூட பாஜக ஆளும் குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர். இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்?" என கேள்வி எழுப்பினார்.
"அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தது அதிமுக. இன்று எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை போதைப் பொருளை கண்டுபிடிக்கவில்லை. மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுதான் கண்டுபிடித்துள்ளது. அப்படி என்றால் திமுக அரசு செயலற்ற அரசாக உள்ளது. தமிழ்நாடு காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது" எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?