திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் புழல் சிறையில் அடைப்பு

2 பேரையும் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Jan 26, 2024 - 13:50
Jan 27, 2024 - 07:28
திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் புழல் சிறையில் அடைப்பு

வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன், மருமகளை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவாக உள்ளவர் கருணாநிதி. இவரின் மகன் ஆண்டோ மதிவானன் தனது மனைவி மெர்லினா வசித்து வருகிறார்.இவர்களது வீட்டில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் இளம்பெண்ணை சூடுவைத்து தாக்கியதாக மெர்லினா மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.மேலும் தன்னை பல்வேறு சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக தனது ஆதங்கத்தை இளம்பெண் வெளிப்படுத்தினார். 

இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் தலைமறைவாகினர். 2 பேரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் இருவரின் குடும்பத்தாரிடமும், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணை தாங்கள் கொடுமைப்படுத்தவில்லை என்றும் தங்களுடன் சந்தோஷமாகவே இளம்பெண் இருந்தார் என்றும் கூறி வீடியோக்கள் மற்றும் ஆடியோவை வெளியிட்டனர்.இதுகுறித்து பேசியுள்ள இளம்பெண், வெளியுலகிற்கு  தன்னை சந்தோஷமாக வைத்திருப்பதுபோல்  காட்டிக்கொள்ள அப்படியெல்லாம் செய்தார்கள். அன்று இரவே வீட்டில் தாக்கினார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து எம்.எல்.ஏவின் மகன், மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண்ணுக்கு 6 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

இந்த புகாரில் தனிப்படை போலீசார் ஆந்திராவில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகளை கைது செய்தனர். அவர்களை இன்று காலை எழும்பூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow