ட்யூட்டி முடிஞ்சா என்ன? கைக் குழந்தையுடன் கடமையாற்றிய காவலர்..!
தனது கையில் இருந்த குழந்தையுடன் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசலை சரி செய்தார்
`திருவாரூரில் பணியில் இல்லாத போதும், மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதைக் கண்ட காவலர் ஒருவர், கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர் செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
திருவாரூர் நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் விளமல் கல்பாலம் பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக எப்போதும் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்படுவது வழக்கம். மேலும் விஜயபுரம் பகுதியில் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணியும் நடைபெற்று வருவதால், திருவாரூர் பழைய பேருந்து நிலையப் பாதையை முழுவதுமாக நகராட்சி நிர்வாகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடைத்தது.
இதனால் திருவாரூர் நகரின் மையப் பகுதிக்குள் நுழையும் கனரக வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் அனைத்தும் விளமல் கல்பாலம் அருகே உள்ள பாலம் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தை மாத இறுதி முகூர்த்தநாள் மற்றும் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் விளமல் கல்பாலம் அருகில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக விளமல் கல்பாலம் அருகில் போக்குவரத்தை சரி செய்ய, அப்போதைக்கு அங்கு யாரும் பணியில் இல்லை. இந்நிலையில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் மணிகண்டன் என்பவர், காலைப் பணியை முடித்துவிட்டு தனது ஒரு வயது கைக்குழந்தையுடன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க விளமல் பகுதிக்குச் சென்றார்.
அப்போது போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் படும் இன்னல்களைக் கண்ட மணிகண்டன், தனது கையில் இருந்த குழந்தையுடன் சுமார் அரை மணி நேரம் சாலையின் இருபுறமும் அணிவகுந்து நின்றிருந்த வாகங்களை ஒன்றன் பின் ஒன்றாக இயக்க வைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் அவரைப் பாராட்டினர். மேலும் இதுகுறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவலர் மணிகண்டனை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டியுள்ளார்.
What's Your Reaction?