கள்ளச்சாராயம் மரணங்கள்... தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம்... இயக்குநர் பா ரஞ்சித் சாடல்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என இயக்குநர் பா ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

Jun 20, 2024 - 13:21
கள்ளச்சாராயம் மரணங்கள்... தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம்... இயக்குநர் பா ரஞ்சித் சாடல்!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்த கன்னுக்குட்டி என்பவரும் அவரது மனைவியும் கைதாகியுள்ளனர். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.   

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் சம்பவத்திற்கு இயக்குநர் பா ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!” 

”மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நடிகரும் தவெக தலைவருமான விஜய் இச்சம்பவத்தில் தமிழக அரசை நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித்தும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு தான் இதற்கு காரணம் என நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கைவயல் விவகாரத்திலும் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த பா ரஞ்சித், சில நேரங்கள் விமர்சனமும் செய்திருந்தார். இப்போது கள்ளச்சாரயம் விவகாரத்திலும் பா ரஞ்சித் வெளிப்படையாக கருத்துத் தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய், பா ரஞ்சித், சரத்குமார் தவிர மற்ற கோலிவுட் நட்சத்திரங்கள் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow