டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் : சம்மனை புறக்கணித்த கெஜ்ரிவால் கைது... ED நடவடிக்கை...
நாளை கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை கடந்தாண்டு டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவை கைது செய்து சிறையில் அடைத்தது.
அதைதொடர்ந்து இந்த ஊழல் புகார் குறித்த விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகும்படி அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியது. ஆனால் ஒவ்வொரு முறையும், அவர் ஒவ்வொரு காரணங்களை கூறி சம்மனை நிராகரித்தார்.
இதனிடையே டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில், தெலங்கானா எம்.எல்.சியும், முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வின் மகளுமான கவிதா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். அதைதொடர்ந்து, தற்போது அதிரடியாக அவரை கைது செய்துள்ளனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்து தகவலறிந்து அவரது இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
What's Your Reaction?