Kanimozhi : தமிழ் துரோகத்தைத் துரத்தி அடிக்கவேண்டிய தேர்தல்! - திமுக எம்.பி கனிமொழி ஆவேசம்

“தமிழைவிட மத்திய அரசு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கே கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது”

Mar 3, 2024 - 08:18
Mar 3, 2024 - 08:19
Kanimozhi : தமிழ் துரோகத்தைத் துரத்தி அடிக்கவேண்டிய தேர்தல்! - திமுக எம்.பி கனிமொழி ஆவேசம்

மத அரசியலுக்கும் தமிழ் துரோகத்திற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதைக் காட்டும் தேர்தலாக, வரும் தேர்தல் அமைய வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி பேசினார். 

தஞ்சையில் உள்ள ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழா மற்றும், தமிழ்நாடு அரசு பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றன. அதில் பங்கேற்று திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில துணை பொதுச்செயாளருமான கனிமொழி உரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ஓரிரு திருக்குறளைக் கூறிவிட்டு, பிரதமர் மோடி விளம்பரம் செய்து கொள்கிறாரே தவிர, தமிழ்நாட்டிற்கு அவர் எந்த நிதியையும் தரவில்லை என குற்றம்சாட்டினார். தமிழ் தொன்மையான மொழி என்பது பிரதமர் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை என தெரிவித்த அவர், ஆனால் தமிழைவிட மத்திய அரசு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

தமிழ்நாட்டில் இருந்து ஜி.எஸ்.டி உட்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசுக்கு, திருப்பிக் கொடுக்கும் மனமில்லை எனவும் கனிமொழி விமர்சித்தார். தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறிய கனிமொழி, கணக்கு காட்டுவதற்காகவே தற்போது ரூ.7,000 கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை என பூஜ்ஜியத்தைக் காட்டி துரத்தக்கூடிய தேர்தலாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் இருக்க வேண்டும் எனவும் கனிமொழி கேட்டுக் கொண்டார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow