விவசாயிகள் பிரச்னை சட்டசபையில் பேச வாய்ப்பு மறுப்பு: அதிமுக வெளிநடப்பு 

தமிழக சட்டசபையில் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் வெளிநட்பு செய்தனர்.

விவசாயிகள் பிரச்னை சட்டசபையில் பேச வாய்ப்பு மறுப்பு: அதிமுக வெளிநடப்பு 
அதிமுக வெளிநடப்பு 

தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. கூட்டத்தின் தொடக்கத்தில் கேள்வி - பதில் நேரம் முடிந்த பிறகு, கறிக்கோழி விலை உயர்வு மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், "நேரமில்லா நேரத்தில் இந்தப் பிரச்சனை குறித்து உடனே விவாதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். இதற்குப் பதிலளித்த சட்டபேரவை தலைவர் அப்பாவு, "நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அனைவரும் பேசுவதற்கு அனுமதி வழங்க முடியாது. அமைச்சரிடம் இருந்து பதில் பெறப்பட்ட பிறகே இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

சபாநாயகரின் இந்த விளக்கத்தை ஏற்காத அதிமுக உறுப்பினர்கள், அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எழுந்து, "நாங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சனையைத்தான் அவையில் எழுப்ப முயல்கிறோம். மக்கள் பிரச்சனையை விவாதிக்கப் பேரவையில் சில நிமிடங்கள் ஒதுக்குவதில் என்ன சிரமம் இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அதிமுக கொண்டு வந்துள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான பதில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை அதிகாரிகளுடன் ஆலோசித்து, உரிய தகவல்களுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் விரிவான விளக்கம் அளிப்பார். சட்டப்பேரவை தலைவர் முறைப்படி விளக்கம் அளித்த பிறகும், அவையில் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவது நேரத்தை வீணடிக்கும் செயல்" என்று குறிப்பிட்டார்.

முதல்வரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி கூறுகையில்: விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும். கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது. ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது.6 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனை. பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி விட்டு அரசு பின்வாங்குவது ஏன்? மகளிருக்கு ரூ.1500 வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021-ல் ஏற்கனவே அறிவித்தோம்.

ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும். மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. மாணவர்களின் வாக்குகளை கவரவே இலவச மடிக்கணினிகளை அரசு வழங்குகிறது. மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீது வெறுப்பு, அதை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow