திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தி கோஷம் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பக்தர்கள் கோஷத்துடன் பரணிதீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமா்சையாக நடந்து வருகிறது.
9 நாள்கள் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளின் மாவட வீதிவுலா நடைபெற்றது. பத்தாம் நாளான இன்று புதன்கிழமை(டிச.3) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேதம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையாா் கருவறை எதிரில் ஏகன் அனேகன், அனேகன் ஏகன்' என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து ஐந்து மடங்குகளுக்கு தீபம் ஏற்றப்பட்டு அதில் இருந்து ஒரு மடக்கில் பரணி தீபம் ஏற்பட்டது. அதன்பின்னர் கருவறையில் ஏற்பட்ட பரணி தீபத்தை எடுத்துச்சென்று, கோயிலில் உள்ள விநாயகர், அம்மன், முருகர் உள்ள சன்னதிகளில் சிவாச்சாரியர்கள் பரணி தீபம் ஏற்றினர்.
இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷம் முழங்க பரணி தீபத்தை வழிபட்டனர்.
அதனைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப தரிசனத்தை காண லட்சணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். விழாவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரிவல பாதையில் எல்இடி திரைகள், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

