கை வைத்த சிவபெருமான்.. வைகையில் கால் வைக்கும் கள்ளழகர்.. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை..காரணம் என்ன?
சிவபெருமான் கை வைத்து உருவான வைகையில் கால் பதிக்கிறார் கள்ளழகர். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி திருக்கல்யாணமும், திருத்தேரோட்டமும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நாளைய தினம் சித்ரா பௌர்ணமி நாளில் வைகையில் எழுந்தருகிறார் கள்ளழகர். மதுரைக்கு வைகை ஆறு வந்தது பற்றியும் அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்பது பற்றியும் புராண கதைகள் கூறப்படுகின்றன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்த உடன் தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை பட்டத்தரசி மரகத வல்லிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார் மீனாட்சி. உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டார். குண்டோதரர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர்.
தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன. அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி வைகை ஆயிற்று.
இது ஒருபுறம் இருக்க சித்ரா பவுர்ணமி நாளில் சிவபெருமான் கை வைத்து உருவான வைகை ஆற்றில் கள்ளழகர் கால் பதித்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். தனது வருகைக்காக வைகை ஆற்றில் தவளையாக தவமிருக்கும் முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கவே கள்ளழகர் மதுரைக்கு வருகிறார் என்கிற புராண கதையும் உள்ளது.
வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவை மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவற்றை சூடிக்கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளுவார். இது பலநூறு ஆண்டுகாலமாக நடந்து வரும் நிகழ்வாகும்.
மகாவிஷ்ணுவின் 108 திவ்விய தேசங்களில் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் தலமும் ஒன்று! ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். மேலும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு பேர் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது.
ஆண்டாள் பூமாதேவியின் அம்சம். துளசி வனத்தில் அவதரித்தவர். கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள். நந்தவனத்தில் பறித்த பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தாம் சூடிப்பார்த்து இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு அணிவிப்பார்.
ஒருநாள் இறைவனுக்கு கட்டிய மாலையில் ஒரு நீளமான தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை மாலையாக கட்டி பெருமாளுக்கு சூட்டினார். உடனே இறைவன், கோதை சூடி களைந்த மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு என்று கேட்டு வாங்கி அணித்தார். இறைவனையே விரும்பிய ஆண்டாள் ஸ்ரீரங்கம் சென்று அவரோடு ஐக்கியமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். எனவேதான் இன்றைக்கும் பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. நாளைய தினம் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம், ஆகியவற்றை காரில் எடுத்து மதுரைக்கு கொண்டு சென்றனர்.
அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு இது காலையில் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் இன்றிரவு தங்குகிறார். இன்று நள்ளிரவில் திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டுதான் தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகையில் இறங்குவார். கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவத்தை காண ஏராளமானோர் மதுரைக்கு வந்து கொண்டுள்ளனர். மதுரை மாநகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
What's Your Reaction?