சித்திர குப்தர் அவதரித்த சித்ரா பௌர்ணமி.. விரதம் இருந்து வணங்கினால் இத்தனை சிறப்புகளா?

சித்ரா பௌர்ணமி சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில்தான் சூரியன் மேஷ ராசியான தனது உச்ச வீட்டில் பலம் பெற்று நிற்கிறார். துலாராசியில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பலம் பெற்று பயணம் செய்வார். சித்ரா பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வழிபட நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Apr 22, 2024 - 18:08
சித்திர குப்தர் அவதரித்த சித்ரா பௌர்ணமி.. விரதம் இருந்து வணங்கினால் இத்தனை சிறப்புகளா?

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார்.  வசந்த ருதுவில் நீர் நிலைகள் தெளிவாக இருக்கும். அந்த தெளிந்த நீரில் பௌர்ணமி நிலவு அழகிய சித்திரத்தை போல் தோன்றும் என்பதால்தான் சித்ரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என மற்றொரு கதை கூறுகிறது.

ஒரு சமயம், கயிலையில் பார்வதி தேவி, தங்கப்பலகையில், சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்தச் சித்திரத்திற்கு, சிவனாரை உயிர் கொடுக்க வேண்டினார். அந்த‌ வேண்டுகோளை ஏற்று, சிவபெருமானும் சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இவ்வாறு சித்திரத்தில் இருந்து தோன்றியதால் அவர், சித்திர புத்திரன் என்றும் சித்ரகுப்தர் என்றும் அழைக்கப்படலானார். 

சித்திரத்திலிருந்து சித்திர குப்தர் தோன்றிதை குறிக்கும் சித்திரா பௌர்ணமி என பெயர் ஏற்பட்டது என புராணங்கள் கூறுகிறது.  மானிடர்கள், தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியை அவருக்கு வழங்கினார் சிவபெருமான். சித்ர குப்தரும் அவ்வாறே செய்யலானார். 'சித்' என்றால் மனம், 'குப்த' என்றால் மறைவு எனவும் பொருள்படும். நம் மனதில், மறைவாக இருந்து நாம் செய்யும் பாவபுண்ணியங்களைக் கண்காணிப்பதாலும் இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதெனக் கொள்ளலாம்.

எமதர்மராஜர், தம் பணியின் கடுமை காரணமாக, தமக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என சிவனாரிடம் பிரார்த்தித்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, சிவனார், சூரிய தேவனின் மனதை மாயையில் ஆழ்த்தினார். அதன் விளைவாக, வானவில்லின் ஏழு நிறங்களும் சேர்ந்த உருவமான, நீனாதேவி என்ற பெண்ணைக் கண்டு சூரியபகவானுக்கு காதல் ஏற்பட்டது. இவ்விருவருக்கும் தோன்றிய புதல்வனே சித்ரகுப்தர். அவர் தோன்றும் பொழுதே, ஏடு மற்றும் எழுத்தாணியுடன் தோன்றினார். 
காஞ்சியில், சிவபெருமானைக் குறித்து, கடும் தவம் இருந்து அஷ்ட மா சித்திகளும் அடைந்தார் சித்ரகுப்தர். அதன் பின், இறைவனின் ஆணையின் பேரில், எமதர்மராஜருக்கு கணக்காளராக இருந்து, ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு வருகிறார். இதன் காரணமாக, சித்ரகுப்தருக்கு, காஞ்சியில் தனிக் கோயில் இருக்கிறது.

சூரியன் சிவனின் அம்சமும் சந்திரன் சக்தியின் அம்சமும் ஆவர். எனவே சித்ரா பௌர்ணமி நாளில் சிவசக்தி வழிபாடு செய்வது சிறப்பாகும். இந்த சித்ரா பௌர்ணமி நாளில் மயிலாப்பூரில் தர்மராஜர் கோயிலில் உள்ள சித்திர குப்தனை வணங்கி நீண்ட ஆயுளையும் தர்ம நெறிதவறாத வாழ்வையும் பெறுவோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow