ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்: அமித்ஷா சந்தித்து ஆலோசனை : அதிர்ச்சியில் எடப்பாடி
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஓ. பன்னிர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ள சம்பவம், எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கடந்த 24-ம் தேதி சென்னை வேப்பேரியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு கூட்டத்தை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், வரும் டிசம்பர் 15-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாகவும், அதனால், டிசம்பர் 15-ம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி, இனியாவது திருந்த வேண்டும், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்று கூறினார்.
இந்தநிலையில் டிசம்பர் 15-ம் தேதி புதிய கட்சி அறிவிப்பை பன்னீர்செல்வம் வெளியிடுவார் என அவரது ஆதரவு நிர்வாகி வைத்திலிங்கம் தெரிவித்து இருந்தார். புதிய கட்சியை தொடங்கி தவெகவுடன் பன்னீர்செல்வம் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.
பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி பாஜக ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில் தான், நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். அங்கு 2 நாட்கள் முகாமிட்டு, பாஜக மூத்த தலைவர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனால், அவர் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வதற்கு முயல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே,இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷா பன்னீர்செல்வம் சந்தித்து 20 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மீண்டும் தன்னை அதிமுகவில் இணைக்கவில்லை என்றால், தனிகட்சி தொடங்குவது உறுதி எனவும் அமித்ஷாவிடம் பன்னீர்செல்வம் தெரிவித்தாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில பாஜக தலைவர்களை பன்னீர்செல்வம் சந்திக்கக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பன்னீர்செல்வம் டெல்லி முகாமிட்டுள்ள விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

