திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரில் ஆடி அசைந்து வந்த மாரியம்மனை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

Apr 16, 2024 - 16:59
Apr 16, 2024 - 17:21
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்..  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இந்த கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  உலக நன்மைக்காகவும்,தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய்,நொடியின்றி வாழவும்,குடும்பம் செழிக்கவும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை  பூச்சொரிதல் நடைபெறும் .

இந்த விழாக்காலங்களில்  மரபு மாறி தன்னைத்தானே வறுத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.  இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி,துள்ளுமாவு ,இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்ரையாகவும்,வாகனங்களிலும் வந்து செல்கின்றனர்.

 இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்கியது. அன்று காலை  அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிரத்திற்க்கும்,
அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர்.  

சித்திரை தேரோட்ட விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். இரவில்  தினமும்  அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம் யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி  திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு  காட்சியளித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. காலை 10.31  மணிக்குள் மேல் அம்மன் தேரில் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow