"துருவ நட்சத்திரம்" படம் பிப்ரவரியில் வெளியீடு - சென்னை ஐகோர்ட்டில் தகவல்

வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Jan 18, 2024 - 14:40
Jan 18, 2024 - 15:05
"துருவ நட்சத்திரம்" படம் பிப்ரவரியில் வெளியீடு - சென்னை ஐகோர்ட்டில் தகவல்

நடிகர் விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் "துருவ நட்சத்திரம்" திரைப்படம் கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது.இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், சிம்புவை நாயகனாக வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்கு முன்பணமாக கடந்த 2018ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளித்ததாக கூறியுள்ளார். 

ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை என மனுவில் குற்றம்சாட்டியிருந்தார். எனவே தம்மிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பணத்தை திருப்பி அளிக்கும்பட்சத்தில், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் என நவம்பர் 22ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பணத்தை திரும்ப செலுத்தாததால், கவுதம் வாசுதேவ் மேனனால் இதுவரை படத்தை வெளியிடமுடியவில்லை.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று (ஜனவரி 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் வழக்கறிஞர் ரேவதி மணிகண்டன் ஆஜராகி, துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், இந்த வழக்கை மூன்று வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow