பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும்

Jan 18, 2024 - 14:45
Jan 18, 2024 - 20:04
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் விதிகளை மீறி அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக ப்யூட்டர் பவுண்டேசன் என்ற அமைப்பை தொடங்கி அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த அமைப்பை செயல்படச் செய்ததாக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாகவும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் காவல்துறை ஆணையர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதை ரத்து செய்யக்கோரி ஜெகன்நாதன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றபோது நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் இருந்தததாகவும், அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், தொலைதூரக்கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ததால் தனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையல் அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஓய்வுக்கு பின் பண பலன் பெறும் வகையில் நிறுவனம் தொடங்கியதாக காவல்நிலையத்தில் தவறாக புகார்அளிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு உயர்கல்வித்துறை அறிவிப்பை தொடர்ந்து (PUTER) நிறுவனம் தொடங்கியது. அதன் நோக்கம் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது. சுய லாபத்திற்காக அரசின் அனுமதி இல்லாமல் லாபத்திற்காக கொண்டுவரப்பட்டது இல்லை. டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் இதர மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. நிறுவனத்தின் இயக்குநராக துணை வேந்தர் செயல்படுவார். அவரது ஓய்வுக்கு பின் புதிய வேந்தர் இயக்குநராக தொடர்ந்து செயல்படுவார். பணபரிமாற்றம் நடைபெற்றதாற்கான எந்த ஆதாரமும் காவல்துறையிடம் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். 

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2013 அரசாணையின் படி, தமிழகத்தில் 9 பல்கலைக்கழகத்தில் பார்க் தொடங்கப்பட்டது. அதில் பெரியார் பல்கலைக்கழகமும் ஒன்று. பல்கலைக்கழகத்தில் பணியில் இருப்பவர், நிறுவனத்தில் செயல்படக்கூடாது என விதியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. சின்டிகேட் உறுப்பினர் அனுமதி இல்லாமல் பியூட்டர் பார்க் தொடங்குவதற்கு பதிலாக ப்யூட்டர் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதற்கு 4 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 
பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததால், தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

14 கோடி ரூபாய் பல்கலைக்கழக மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக தமிழக அரசு ஒதுக்கப்பட்டது. 2023 மார்ச் மாதம் ப்யூட்டர் பார்க் தொடங்க துணை வேந்தர் அனுமதி கொடுத்துள்ளார். பின்னர், 2023 ஜூன் மாதம் ப்யூட்டர் பவுண்டேசன் என பெயரை மாற்றி பதிவு செய்துள்ளார். உள்நோக்கத்துடன் பெயர் மாற்றி பதிவு செய்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.விசாரணை தொடக்கத்தில் உள்ளது. பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் என தெரிவித்தார். 

இருதரப்பு வாதங்களை கேட்டநீதிபதி, பணம் பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக ஏதாவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதா? விஸ்வநாத மூர்த்தி மற்றும் தங்கவேலு ஆகியோர் தனியார் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். துணை வேந்தர் ஜெகநாதன் கையெழுத்திடவில்லை.அதனால், துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்து விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow