ஹவுஸ் மேட்ஸ் திரைப்பட விமர்சனம்: மிஸ்ஸான பேய்ப் படத்தின் மேஜிக்!
கனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகிய தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் குமுதம் விமர்சனம் காண்க.

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹவுஸ் மேட்ஸ்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகியது. சிவகார்த்திகேயன் புரொடெக்ஷன்ஸ் இத்திரைப்படத்தினை வெளியிட்டு இருந்தது.
ஹாரர்- காமெடி கலந்து உருவாகியுள்ள இத்திரைப்படம் குறித்த குமுதம் விமர்சனம் பின்வருமாறு-
தன் காதலி அர்ஷாவைக் கல்யாணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க, ஹீரோ தர்ஷன் ஒரு பழைய ஃபிளாட்டை விலைக்கு வாங்குகிறார். அந்த வீட்டில் குடியேறிய அடுத்த நாளே, வீட்டில் ஃபேன் தானாக ஓடுகிறது. பைப்பில் தானாக தண்ணீர் வருகிறது. டி.வி. அதுவாக ஆன் ஆகிறது... என பல திக் திக் சம்பவங்கள் அரங்கேற, இளம் தம்பதிகளுக்கு நெஞ்சுக்குள் பக் பக்.
சரி, அப்படி அந்த வீட்டில் என்ன இருக்கிறது? இவர்களின் கண்களுக்குத் தெரியாமல் கணவன், மனைவி அவர்களுக்கு ஒரு ஆறு வயது மகன் என இன்னொரு குடும்பமும் அதே வீட்டில் வசிக்கிறது. ஆனால், அவர்கள் 10 வருடம் பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லை பேயா? அதுதான் குழப்பம், அதுதான் ட்விஸ்ட்.
காட்சிகள் காமெடியாக நகரும் போதெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறது. தர்ஷன் சீரியஸாக அழும்போதும், பொறுமை இழந்தவனாக நடிக்கும் போதும் நெளிய வேண்டியிருக்கிறது. நாயகி அர்ஷா சாந்தினி பைஜூ செம ஃப்ரஷ், ஷேப், ஷார்ப் எக்ஸ்பிரஷன்ஸ். காளி வெங்கட், வினோதினி ஜோடி கச்சிதம். ஒளிப்பதிவு, இசை மிரட்டல்.
பேய்க் கதையில், பேய் பேயாக இருப்பதில் இயக்குநர் டி.ராஜவேலுவுக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை. ஹீரோவின் அலுவலக சீனியரை வைத்து மொத்த படத்துக்கும் லாஜிக்கலாக அவர் தரும் விஞ்ஞான விளக்கம், 'நீட்' எக்ஸாமில் விடை தெரிந்தும் புரியாத பிஸிக்ஸ் கேள்வி! அதனாலயே ஒரு ஜனரஞ்சகமான பேய்ப் படத்தின் மேஜிக் மிஸ்ஸிங்.
What's Your Reaction?






