சிவகாசி பட்டாசு விபத்துகள்... பலியாகும் உயிர்கள்.. சட்ட விரோத நிறுவனங்களை ஆய்வு செய்ய குழு.. ஆட்சியர் அதிரடி

சிவகாசியில் அடிக்கடி பட்டாசு விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், பட்டாசு ஆலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

May 14, 2024 - 14:07
சிவகாசி பட்டாசு விபத்துகள்... பலியாகும் உயிர்கள்.. சட்ட விரோத நிறுவனங்களை ஆய்வு செய்ய குழு.. ஆட்சியர் அதிரடி

பட்டாசு உற்பத்தியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி முக்கிய இடம் வகிக்கிறது. இதனிடையே கடந்த சில மாதங்களாக சிவகாசியில் அடிக்கடி பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  உத்தரவிட்டுள்ளார்.  

அதன்படி ஒவ்வொரு குழுவிலும் தலா 4 நபர்கள் இடம்பெறுவார்கள் என்றும், இந்த குழுவானது இன்று (மே 14) முதல் மே 20ஆம் தேதி வரை முதல்கட்ட ஆய்வும், மே 28 முதல் ஜூன் 3 வரை இரண்டாம் கட்ட ஆய்வும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆய்வுக்குழுவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளார். 


1.சிறப்பு ஆய்வுக் குழுவானது நாளொன்றிற்கு குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கிராமத்தில் சட்டவிரோதமாக வீடுகள், விவசாய நிலங்கள் (ம) தரிசு நிலங்கள், பராமரிப்பு இல்லாத கைவிடப்பட்ட கட்டடங்கள் ஆகிய இடங்களில் பட்டாசு உற்பத்தி ஏதும் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

2. ஆய்வுக் குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வட்டங்களில், வாரம் ஒரு முறை இரவு நேரங்களில் விதிமீறல்கள் ஏதும் நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

3. உச்சநீதிமன்றம் 29.10.2021-ம் தேதியிட்ட தீர்ப்பில், சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்த விதமான தடையுமில்லை. ஆனால், பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பினை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஆய்வுக் குழுக்கள் கண்காணிக்க வேண்டும்.

4. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்புடைய காவல் நிலையத்தினர் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக வெடி செய்யும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்.

5. குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிய முன் அனுமதியின்றி விடுப்பு ஏதும் வழங்கப்பட மாட்டாது. 

6. ஆய்வுக்குழுவானது தங்களது ஆய்வு அறிக்கையினை உரிய ஆய்வு படிவத்தில் நாள்தோறும் மாலை 5.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow